தேடல்

Wednesday 19 September 2012

மழை தேடும் மனிதர்கள் !

மனிதக் கோடாரிகள்
வெட்டி வீழ்த்திய
உயிரற்ற மரச் சடலங்கள்..
நம் வீடுகளில்
நிலைக் கதவுகளாய்
சன்னல்களாய்
தூண்களாய்
நாற்காலிகளாய்
நடவாகி நிற்கிறது...


இன்றாவது
தன் சந்ததியை
நடவு செய்ய மாட்டானா ?
என்ற ஏக்கத்தில்
மனிதனுக்கு
அடிமையாய்
அறம் புரியும்
மர ஆன்மாக்கள்..
மறந்தே போகிறது.!
தன்னைக் கொன்ற
மனித சந்நிதியை.?

ஆதியில்
விறகுக்காக
மரம் வெட்டிய
மனித கரங்கள்..
இன்று
வீம்புக்காகவும்
வெட்டுகிறது...

கானகங்கள்
களவாடப்பட்டதால்,
கார் மேகங்கள்
காணாமல் போனது..
மழை யென்னும்
மகத்துவம் கானல் நீரானது...


பருவ மழை தேடும்
விவசாயி கூட
பருவம் வந்ததும்
அறுவடை செய்கிறான்
பதறுகளை...
பருவ மழை பொய்த்ததால் !

நாகரீகம்
பற்ற வைத்த நெருப்பு
பசுமைகளை பொசுக்கியது..
பசுமை மறைந்ததால்
உயிர்மை விலகியது...

அருகிப் போன
காடுகளில்,
குறுகிப் போனது..
அரிய விலங்குகளின் விலாசங்கள் !

காரிருள் காடுகள்
கட்டாந்தரை ஆகியதால்,
காலாவதி ஆனது..
பறவைகளின் பிறப்பிடங்கள் !


மனிதன்
மரம் கொன்றான் - அதனால்
மழை கொன்றான்..
மனிதம் கொன்றான் - விரைவில்
மரணம் கொண்டான்...

மனிதன் இன்னும்
பணம் திண்ணப்
பழகாததால் - உலகில்
'பணப் பயிர்கள்' மட்டும்
நடவாகிறது - அதனால்
எங்கோ ஒரு சொட்டு
மழையாகிறது !


வறட்சியில்
கிணறுகள்
மழை தேடுகிறது..
தழைகள் கருகிய
தாவரங்கள்
தண்ணீர் தேடுகிறது..
தாகம் கொண்ட
தரணியின் தலையெழுத்து
இங்கு சப்தமில்லாமல் 
செதுக்கப்படுகிறது...
மழை துளிகளால்.!

இறைவன் நாடி,
ஆளுக்கொரு மரம் நட்டால்,
ஆயுளின் வரம் நிச்சயமாகும்..
ஆக்சிஜன் தரும் உத்திரவாதம்...

மரம் நடுவோம்.. மழை பெறுவோம்... 

1 comment:

  1. ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களின் கவிதை வரிகளை சிந்தித்தேன்.இமைகள் திறக்க மறுக்கின்ற. இன்று மழைகளும் பெய்ய மறந்து பொய்த்து விட்டன..

    ReplyDelete